வாசிப்பு ஒரு சுய ஆராய்ச்சி மனித மூளைக்குள் ஒரு நொடிக்குள் மின்சாரத்தை விட வேகமாக பாயும் நினைவலைகளில் தோன்றிய வேதியியல் ஆராய்ச்சியின் முடிவா? கழிவா? என புரியாத குழப்பத்தில் இப்பதிவை உடனே எழுத ஆரம்பித்துவிட்டேன். "செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம்.." என்ற பொய்யாமொழிப் புலவனின் குறளை நான் கருவறையில் இருக்கும் பொழுதே என் தாய் சத்தமாக உரைத்து இருப்பார்களோ என எண்ணும் அளவிற்கு எனக்கும் வாசிப்பிற்கும் தூரம். எனது ஆரம்ப பள்ளி காலங்களில் படிப்பு சுமை என்ற கிரகணம் என்னை அதிகம் கவ்வாத(20 வருஷம் முன்னாடி அப்படிதான்) காலகட்டத்தில், என் காதுகளை என் பாட்டியின் மற்றும் அம்மாவின் கதைகளுக்கும், புரளிகளுக்கும் கடன் கொடுத்து இருந்தேன். எனது வாழ்வில் கல்வி என்ற பகுதி தீவிரம் அடைந்த பொழுது, இயந்திரங்களுக்கு நடுவில் மாட்டி வேறு ஒரு இயந்திரமாய் வெளி வரும் இரும்பு பட்டறை(தொழிற்சாலை) போலவே பள்ளி எனக்கு தோன்றியது. அங்கு மதிப்பெண் எடுப்பதே தலையாய கடமை என எண்ணி அனைவருடனும் சேர்ந்து ஓடிக் கொண்டு இருந்தேன். அதை ஒரு அறிவுக்கூடமாக பார்க்கவே தோன்றவில்லை. நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தேவையான அடிப்படை காரணியாகவே கல்வி எனக்கு தோன்றியது. அங்கு நன்கு மனனம் செய்ய கற்றுக்கொண்டேன் என்பதை தவிர என் மூளைக்குள் சென்ற ஒரே விஷயம் தமிழ் தானோ என தோன்றுகிறது. புத்தகத்தில் இருப்பதை அப்படியே கூறும் ஆசிரியருக்கு என் செவி சாயவில்லை. எனக்கு தாய்மொழியாய் பழக்கமான தமிழை செய்யுள் வடிவில் கூறி, பின் உரைநடையில் விளக்க மெனக்கெடுவதால் தமிழில்(பாடம்) கூறியவை மட்டும் என் மூளைக்குள் அதிகம் புகுந்ததோ என தோன்றுகிறது. எனவே இங்கு வாசிக்கும் ஆர்வம் கூடியதாக என்னால் ஏற்க முடியவில்லை. என் பதின்ம வயதின் ஆரம்பத்தில் எனக்கு கிரிக்கெட் மற்றும் தெரு விளையாட்டுகளில் இருந்த ஆர்வம் வாசிப்பில் இல்லை. சும்மா இருக்கும் நேரங்களில் வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதிலும், வானொலி கேட்பதிலும் பொழுது போய்விடும். இதையெல்லாம் மீறி என் வாசிப்பை சிறிதளவேணும் அதிகரித்தவை , சிறுவர் மலரும், கிரிக்கெட் செய்திகளும், என் பாட்டிக்காக நான் வாசிக்கும் நாளிதழும் தான். என் அப்பாவின் அலுவலக நூலகத்தில் ஆண்டு விடுமுறையின்போது எடுத்து வந்த விக்ரமாதித்தன் கதைகள், ஒரு தமிழ் காமிக்(பெயர் ஞாபகம் இல்லை), ராஜேஷ்குமாரின் க்ரைம் போன்றவை என் வாசிப்பை சிறிது வளர்த்தன. 'அப்பா அடுத்த புக் எடுத்துட்டு வாங்கப்பா' என்ற கேட்டது ஞாபகம் உள்ளது. ஆனால், எல்லோரும் விடுமுறையில் நூலகத்தை பயன்படுத்தியது என் ஆர்வத்திற்கு முட்டுகட்டையாய் போய்விட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுது வாங்கிய கணினியை ஆராயந்தே காலம் ஓடிவிட்டது. கல்லூரி இறுதியில் வேலைக்கான வாழ்க்கையை பற்றிய பயத்தில் சுய முன்னேற்றத்தில் இறங்கிவிட்டேன். அதற்கும் செவி வழி அறிவுரை தான். புத்தகத்தை நாடவில்லை. ஒருவேளை அப்பொழுதே கணினியில் தமிழ் இப்பொழுது இருப்பது போல் எளிதாக கிடைத்து இருந்தால் நிறைய வாசித்து இருப்பேனோ!! என் கூட படித்த(அங்கில மோகம் பிடித்த) அதிமேதாவிகளும் கணிபொறி அல்லது ஆங்கில புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவர்கள். நான் எதிர்திசையில் பயணிப்பவன். ஆங்கில நாளிதழோ,புத்தகமோ படிக்கும் ஆர்வம் இதுவரை வந்ததேயில்லை. இதுவரை ஒரு ஆங்கில புத்தகம் கூட படித்ததில்லை. முயற்சி செய்ததும் இல்லை. வாசிப்பின் அழகே நம்மை அப்படியே அதற்குள் பயணிக்கவைப்பதில் தான். என்னதான் தகவல் தொழில்நுட்ப துறையில் நாள் முழுதும் ஆங்கிலம் பேசி வேலை செய்தாலும், ஒரு புத்தகத்தை அகராதியின் உதவி இல்லாமல் படிக்குமளவு எனக்கு ஆங்கில ஆளுமை இல்லை. அப்படி அடிக்கடி அகராதியை நாடினால் வாசிப்பின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்ற எண்ணமும் உள்ளது. மொத்தத்தில், முன்பின் அறியா மனிதர் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் குழந்தையிடம் தோன்றும் அறுவருப்பு போன்றது என் ஆங்கில வாசிப்பின் உணர்வு. இவை எல்லாம் தாண்டி என் வாசிப்பை தடுத்து நிறுத்தியது என் சோம்பேறித்தனம் தான் என்று தோன்றுகிறது. என் தேடல் இல்லா குணம் தான் என் வாசிப்பை வெகுவாக பாதித்துவிட்டதோ எனவும் தோன்றுகிறது. வாசிப்பு இல்லாமல் போனதற்காக என்னை அசூசை கொள்ளச் செய்தது என் தம்பி பிரபு தான். அவன் தான் எனக்கு கீச்சகத்தை(ட்விட்டரை) அறிமுகம் செய்து வைத்தான். இப்படி வாசிப்பு இல்லாமல் இருந்த என்னை கீச்சகம்(ட்விட்டர்) மாற்றிவிட்டது. நான் தேடி போகாமலே என் சந்தில்(TL) சாளரம்(ப்ளாக்) மற்றும் மின் புத்தககங்களின் சுட்டியை(லிங்கை) கொண்டு வந்து கொட்டியது. அவை அனைத்தையும் படிக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். சாளரங்களை பொதுவாக ஓரிரு நாளில் படித்துவிடுறேன். புத்தகங்களுக்கு தனியாக திட்டமிட வேண்டியுள்ளது. இது வரை பொன்னியின்செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு படித்து இருக்கிறேன். இனி எல்லா புத்தகமும் படிக்கும் எண்ணமும் உள்ளது. எனது வாசிப்பு அனுபவத்தில்(சரி..இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கேன்..ஒத்துகிறேன் :) ), புத்தகத்திற்கு வயது என்பதே இல்லை என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. என் ரசிப்பை உயர்த்துகிறது. என் தனிமைக்கு சிறந்த வடிகாலாய் உள்ளது. இந்த தலைமுறையை சேர்ந்த என் போன்ற சோம்பேறிகளுக்கே வாசிப்பின் பலனை உணர இத்தனை வருடம் பிடித்திருக்கிறது என்றால், கூகுளில் தேடி ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அப்படி ஒரு விஷயம் உலகில் இல்லையோ என யோசிக்கும் அளவு தேடல் இல்லா சோம்பேறி ஆகி கொண்டு இருக்கும் அடுத்த தலைமுறைக்கு, வாசிப்பு என்பது உயிர் போகும் தருணத்தில் தேவையான அளவு முகமூடி வழி செல்லும் உயிர்வளி காற்று போல இருக்குமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அவ்வளவாக வாசிப்பு இல்லாமலே பதிவு எழுதுவதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது :) என் தம்பி பிரபு சொன்னான் "பதிவு மட்டும் எழுதிவிட்டு மற்றவர் எழுத்துக்களை படிக்காமல் இருப்பது வாசிப்புக்கு செய்யும் துரோகம்". வாசிக்க ஆரம்பித்துவிட்டதாலும், இனி தொடர்ந்து வாசிக்கும் ஆர்வமும் நம்பிக்கையும் இருப்பதாலும், பதிவு எழுத கூச்சம் வரவில்லை... :) | |||
வாசிப்பு என்னும் சுவாசிப்பு![]()
அந்தக்காலத்தில் குழந்தை அழுதால் தாலாட்டு பாடி குழந்தையின் அழுகையை நிறுத்துவார்கள்.இப்பொழுதோ ரிமோட்டை கையில் கொடுத்து விட்டால் குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டாற் போல் நின்று விடுகின்றது. வாசிப்புதன்மை சமூகத்தில் அருகி வருவதற்கு இதுதான் ஆரம்பகாரணம்.
நான்கு மாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நாம் டிவி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் டிவி திரையை பார்க்க ஆரம்பிக்கின்றது.குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.
வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும்,ஞாபகசக்தியும்,கருத்தாழமும்,சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் ,பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பதுஆய்வாளர்களின் கூற்று.பிற்காலத்தில் அறிவு செறிந்த மாணாக்கனாக தெளிவான கருத்துடையவனாக அவனது வாழ்கை மேம்பட துணை நிற்கும்.
வாசிப்புத்திறமை பெற்ற மாணவனுடைய செயல்களும்,சிந்தனையும் ஞாபகசக்தியும் வாசிப்புத்திறன் இல்லாத மாணவனில் இருந்து வித்தியாசப்படும்.வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமின்றி,சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.
வாசிப்பின் மூலமே மனிதன் சிறப்படைகின்றான்.இந்த வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.நான்கு மாதக் குழந்தை டிவி திரையை நோக்க ஆரம்பித்தால் அதனை அணைத்து விட்டு கலர் கலர் படங்கள்,பூக்கள் போட்ட புத்தகத்தை விரித்து காட்டுங்கள்.குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக்கொடுங்கள்.குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது புத்தகத்தைகாட்டி கற்றுக்கொடுத்தலை ஆரம்பியுங்கள்.வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.
குழந்தைக்கு பிறந்த நாளா?வீட்டில் விஷேஷமா?பொம்மை,வீடியோ கேம்,விளையாட்டு சாதனங்கள் என்று வாங்கி பரிசளிப்பதில் காட்டும் ஆர்வம் புத்தகம் வாங்கி பரிசளிப்பதில் இல்லை என்பது கவலை தரும் உண்மை.
ஒரு வீட்டை பற்பல கற்பனைகோட்டைகள் அடுக்கடுக்கடுக்காய் மின்ன பார்த்து பார்த்து கட்டுகின்றோம்.துணிவகைகள் வைக்க அலமாரி,நகைகள் வைக்க,மளிகை வைக்க,பொம்மைகள் வைக்க,பாத்திரங்கள் வைக்க,டப்பாக்கள் அடுக்க என்று ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து செய்கின்றோம்.எத்தனை வீட்டில் புத்தகங்களை பாதுகாத்து வைக்க என்று புக் செல்ஃப் அமைக்கின்றோம்?இதுவும் கவலை தரக்கூடிய உண்மையே.
பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகள்,பஸ்ஸில்ஸ்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களில் இளைய தலைமுறைகள் மிக மிக குறைவு என்பது கவலைக்குறிய விடயம்.குறுக்கெழுத்துப்போட்டியை பதினைந்து நிமிடங்களில் முழுமையாக நிரப்பி விடும் திறன் பள்ளிப்படிப்பை தாண்டாத தாய்க்கு அமையப்பெற்று இருந்தால், பல்கலைகழகம் படிக்கும் அவளது மகனுக்கு 4 கட்டங்களைக்கூட நிரப்ப இயலாத அளவிற்கு அவர்களது திறமை வேறு பக்கம் சிதறி இருக்கின்றது.
ஒரு புத்தகத்தை முழுதாக படிக்கும் நேரத்தில் கம்பியூட்டரில் டவுன் லோட் செய்து முழுதாக ஒரு படத்தினை பார்த்துவிடுவது இக்காலத்தின் கோலம்.இணையத்தில் தேவையற்ற தளங்களோ,சமூக தளங்களோ ஆற்றலை முழுமையாக தந்து விட இயலாது.ஒரு மாணவனை பரிபூரணமானவானாக,சிறப்பான மாணவனாக,அறிவான மாணவனாக இணையதளங்கள் உருவாகுவதை விட அம்மாணவனின் வாசிப்புதன்மை அவனது சிறப்பை வளப்படுத்துகின்றது.
குடும்பத்தில் விஷேஷமா?உடனே ரெஸ்டாரெண்டுக்கு குடும்பத்துடன் சென்று கற்றையாக பணத்தை கொடுத்து உண்டு மகிழ்கின்றோம்.ஒரு முறை சற்றே வித்தியாசமாக ஒரு புத்தகக்கடைக்கு அழைத்துச்செல்லுங்களேன்.வயிறு நிரம்புவதை விட மூளை நிரம்புவது நன்றல்லவா?
ஸ்விம்மிங்க் கிளப்பில் மெம்பராக,டென்னின்ஸ் கிளப்பில் மெம்பராக.கிரிகெட் கிளப்பில் மெம்பராக குழந்தைகளை சேர்த்து விடும் ஆர்வம் ஏன் நூலகத்தில் சேர்த்து விடுவதில் இல்லை?சிந்தியுங்கள்.சிறப்படைவீர்கள்.
குழந்தைகள் இன்னாள் விதைகள்.பின்னாள் விருட்சங்கள்.எதிர்காலத்தில் விருட்சங்கள் மரச்சட்டங்களாகவும்,அடுப்பெறிக்க உதவும் விறகுக்கட்டைகளாகவும் ஆகாமல் நல் விருட்சங்களாக,நிழல் தந்து உதவும் விருட்சங்களாக,காற்றினை சுத்தப்படுத்தும் ஊக்கிகளாகவும் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய விருட்சங்களாகவும் ஆற்றல் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து வாசிப்புத்திறனை நலவே வளர்த்து வாழ்க்கையெனும் இனிய பயணத்தை சீருடன்,சிறப்புடன்,பயனுள்ள வகையில் கழிப்போம்.
ஆளுமைத்திறனையும், ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள தொடர் புத்தக வாசிப்பு அவசியம் என்று அமைச்சர் பெ.ராஜவேலு பேசினார்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சாகித்ய அகாதெமி- தேசிய புத்தக வார விழா நிறைவு விழாவில் அவர் பேசியது:
ஒரு காலகட்டத்தில் தகவல் என்பது அறிவு என்பதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு, தகவல் என்பது ஆற்றல் என்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவர் எந்த அளவுக்கு தன்னைச் சுற்றி நடப்பதையும், நாட்டு நடப்பையும், உலக ஞானத்தையும் பெற்றவராக இருக்கிறாரோ, அவர் ஆற்றல் உள்ளவராக, ஆளுமைத் திறன் உள்ளவராக இருப்பார்.
இத்தகைய ஆளுமைத் திறனும், ஆற்றலும் திடீரென வந்துவிடாது. இதற்கு தொடர்ச்சியாக வாசிப்பு பழக்கம் இருப்பது அவசியம். இவை நாம் சென்று சேர வேண்டிய இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். இதற்கான வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே பரப்பும் முயற்சிதான் இந்த புத்தகக் கண்காட்சி.
பொதுக்குழு உறுப்பினருக்குப் பாராட்டு : சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினராக மகரந்தனை முதல்வர் என்.ரங்கசாமி நியமித்த பிறகுதான், இந்த அமைப்பு குறித்து இலக்கியவாதிகளுக்குத் தெரியவந்திருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது செயல்பாடு அதற்கேற்ப சிறப்பாக இருந்ததாகவும் பலரும் பாராட்டுவதைக் கேட்க முடிகிறது.
முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யும் நபர், அவரது நம்பிக்கையை, நற்பெயரை காப்பவராகத்தான் இருப்பார். அந்த வகையில் மகரந்தனின் பணி சிறப்பானது. 7 நாள்கள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவது சிரமமான பணி. அதையும் அவர் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார் என்றார் அமைச்சர் பெ.ராஜவேலு.
பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை வகித்தார். எழுத்தாளர் பிரபஞ்சன், சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் ராஜா உளளிட்டோர் பங்கேற்றனர்.
வாசிப்பு தான் என்னை வாழவும், பயணிக்கவும் உதவி வருகிறது என்று முதுபெரும் எழுத்தாளர் அசோக்மித்திரன் கூறியுள்ளார். இதுவரை 200 சிறுகதைகளும், 8 நாவல்களும், 15 குறுநாவல்களும் எழுதிய அசோக் மித்திரனக்குத் தற்போது 80 வயதாகிறது. அவரது சிறுகதைகள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பரிசை மூன்று முறையும், இலக்கியச் சிந்தனை பரிசை இருமுறையும் பெற்றுள்ளார். இவரது 18 வது அட்ச ரேகை நாவலுக்கு டால்மியா பரிசும், அப்பாவின் சிநேகிதர் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதும் பெற்றார்.
"எனக்கு வயதாகிறது. நடக்கவே சிரமமாக உள்ளது. ஆனால் என்னால் படிக்க முயல்கிறது. வாசிப்பதால் என்னால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. என்னிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. எனக்குப் பிடித்த புத்தகங்களை தொடர்ந்து தினமும் வாசிக்கிறேன். இந்த வாசிக்கும் பழக்கம் தான் என்னை நினைவாற்றலோடு வைத்திருக்கிறது. வயதான காலத்தின் துயரங்கள் இருந்தாலும் வாசிக்க முடிவதால் எழுதவும் முடிகிறது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கூட ஒரு புத்தகத்தை எழுதி முடித்தேன்" என்று கூறுகிறார்.
"புனைவுகள் எனக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் கதாபாத்திரங்களையும் அவர்கள் வாழ்வையும் எழுத வாய்ப்பளித்தன. எழுதுகிற புனைவுகள் ருசிகரமாகவும் வாசகருக்கு மகிழ்வூட்டிச் சிந்திக்க வைக்கவும் பயன்பட்டன. இது வரை எனக்கு எவ்வித வருத்தங்களுமில்லை. நான் ஒரு நோயாளியாகிவிட்டாலும் அது எனது செயல்பாட்டை ஒன்றும் தடுக்கவில்லை. எனது குடும்பத்திற்கு போதுமான நேரத்தைக் செலவிடுகிறேன். அவர்களுக்கும் புத்தகம் படிப்பதற்கு போதித்து வந்துள்ளேன். வாசிப்பு அவர்களது வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்வில் வெல்வதற்கு என்ன இருக்கிறது? "புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டபின் அவர் கூட தனது வாழ்வில் முழு வெற்றியடைந்து விட்டதாகக் கூறவில்லை. ஒருவரின் வாழ்வில் செயலுக்கு முடிவேயில்லை. இன்று நாலு வயதுக் குழந்தைகூட கணினியைப் பயன்படுத்துகிறது. ஆனால் நான் இன்னும் கையால் தான் எழுதுகிறேன். சில நேரம் கணினியில் டைப் செய்தாலும் எழுதுவதில் தான் எனக்குத் திருப்தியாகும்.
இளம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை பரந்த அறிவும் தீவிரமும் உள்ளவர்களாக உள்ளனர். ஆற்றலும் திறமையும் அவர்களிடம் உள்ளது. ஆனால் வாசிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கிறார்கள். அதைவிட்டுக் கொஞ்சம் வெளியில் வந்தால் வாழ்க்கை மேலும் அழகாக இருக்கும்" என்கிறார் அசோகமித்திரன்.
வாசிப்புப் பழக்கம் பற்றிய கதைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் சில வேளை எழுந்திருக்கக் கூடும். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பு பற்றி அதிகம் கதைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஒரு மொழி மீதான பாண்டித்தியம், அம்மொழியிலான நூல்களை ஏன் செய்தித்தாள்களை ஆர்வமாக வாசிப்பதால் ஒருவரிடம் இயல்பாகவே குடிகொண்டு விடக்கூடும். மொழிகள் எம்மோடு இணைந்து கொள்வதன் நிகழ்தகவு, அம்மொழி தொடர்பாக நாம் கொண்டுள்ள ஆர்வத்தின் பால் தங்கியிருக்கின்றது என்பது எனது கருத்தாகும்.
நாடு அல்லது சமூகம் ஒன்றின் எழுத்தறிவு வீதத்தை அளவிடும் அளவீடுகள், இடத்திற்கு இடம் வேறுபாட்டைக் காட்டக்கூடியன. ஆனாலும், பொதுவாக ஒரு சமூகத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் திறனைக் கொண்டவர்களின் சதவீதம் அச்சமூகத்தின் எழுத்தறிவு சதவீதமாக சாதாரணமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஆனாலும், இன்றைய நிலையில் தகவல்கள் தான் உலகத்தின் போக்கைத் தீர்மானிக்கும் காரணியாக உருவெடுக்கத் தொடங்கியதிலிருந்து, கணினியை இயக்கக்கூடிய ஒரு தனிநபரின் ஆற்றலும் எழுத்தறிவை அறிந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் ஆயுதமாகக் கொள்ளப்படுகிறது.
எழுத்தறிவுள்ள நனிநபராக இருத்தல், குறித்த நனிநபரின் பொருளாதார வளத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியதென்றால் மிகையில்லை. ஒருவர் அதிகமாக கற்றறிந்து கொண்டு எழுத்தறிவை விருத்தி செய்கையில், அவரால் அதிகளவாக செல்வத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனாலும், எல்லா நிலைகளிலும் இந்த அனுமானம் பொருந்தாது என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இதனால், எழுத்தறிவுக்கும் செல்வத்திற்கும் இணைப்பை ஏற்படுத்தல் பொருத்தமாகாது என்ற முடிவுக்கு வரலாம்.
எழுத்தறிவை கொண்டிருப்பவர் குறைந்தது வாசிக்கவாவது தெரிந்திருக்க வேண்டுமென்பது தான் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமமாகும். நூல்களை வாசிப்பதில் மக்கள் காட்டும் ஆர்வம், உச்சளவில் உள்ளது என்பதைக் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பமான சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கண்டு கொள்ளக்கூடியதாகவிருந்தது.
புத்தகக் கண்காட்சி ஆரம்பமான முதல் நாளே நானும் எனது நண்பரொருவருடன் அதனை காண்பதற்கு சென்றிருந்தேன். அங்கே சிறுவர் முதல் பெரியோர் வரை புத்தகங்களை கொள்வனவு செய்வதில் காட்டிய ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இணையத்தின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அரிதாகிவிட்டதாக யார் சொன்னது..?
![]() ![]() ![]()
ஆனாலும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை கொண்ட நூல்களை வாங்குவதில் அதிகமானோர் மும்முரமாக இருந்ததை என்னால் தெளிவாகவே அவதானிக்க முடிந்தது.
![]() ![]()
இந்தப் புத்தகக் கண்காட்சியில் சர்வதேசத் தரத்திலான நூல்கள் பலவும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் முக்கியமானது தான். Harry Potter தொடரின் இறுதி நூலும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, அந்த நூலைப் பெற்றுக் கொள்ள நிறையப் பேர் ஆர்வங் காட்டிதையும் அவதானிக்க முடிந்தது.
![]()
ஆங்கில எழுத்தாளர் Dan Brown இன் நாவல்களையும், அங்கு வந்தோர் ஆர்வமாகக் கொள்வனவு செய்தனர். இந்தக் கண்காட்சி எதிர்வரும் 16ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு, அதில் தமக்கு தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ள இலங்கையில் சகல பாகங்களிலிருந்து மக்கள் தொடர்ச்சியாக கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
![]() ![]()
வருடாந்தம் நடைபெறும் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி அடுத்த வருடம், செம்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடும் பதாகைகள் கண்காட்சி பூமியில் வைக்கப்பட்டிருந்தன.
வாசிப்பது என்பது கட்டாயம் என்பதை உணர்ந்துவிட்ட மக்களாகவே இக்கண்காட்சியை காணவருவோரை என்னால் காண முடிந்தது. எனது கையடக்கத் தொலைபேசியின் கமராவின் மூலம் நான் பிடித்துக் கொண்ட நிழற்படங்களையே இந்தப் பதிவின் இடையிடையே நீங்கள் காண்கிறீர்கள்.
‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்’ வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் கற்றுக்கொண்டே இருக்கிறான்.தினம் தினம் புது புது விடயங்களை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியுள்ளது.’நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறோம்.இதன் படி நாம் கற்க வேண்டியது ஏராளம்.ஆகவே வாழ் நாள் முழுவதும் நாம் கற்பதற்கு வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியமாகின்றது. இதனால் நாம் எல்லோரும் வாசிப்பின் அடிப்படைகளை விளங்கிக் கொண்டவர்களாக வாசிப்புப் பண்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பதால் எமது அறிவையும் ஆற்றலையும் விருத்தி செய்து கொள்ள முடியும்.இதன் மூலமே நாம் சமூக இயங்கு நிலையில் தப்பித்து வாழ முடியும். வாசிப்பதன் ஊடாக நாம் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளவும் எமது பண்பாட்டையும் பண்பாட்டு அடையாளங்களையும் இனங்காணவும் முடியும்.வாசிப்பு மனிதனை வலுவுள்ளவனாக்குவதோடு அவன் பற்றிய வரலாற்று அசைவியக்கத்தையும் புலப்படுத்துகிறது. குறிப்பாக மாணவப்பருவத்தில் வாசிப்புப்பழக்கத்தை கொணடிருப்பது அவர்களின் அறிவு மற்றும் ஆற்றல் மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.இன்று நாம் போற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் சிறந்த வாசிப்புப்பழக்கமுடையவர்கள்.தாம் சார்ந்த துறையோடு மட்டுமல்லாது பலதுறைகளையும் வாசித்து தம்மறிவை வளர்த்துக் கொண்டவர்கள்.அதனாலேயே அவர்களால் உலகத் தலைவர்களாக முடிந்தது.மகாத்மா காந்தி,நேரு,பேரறிஞர்அண்ணா,ஆபிரகாம்லிங்கன்,லெனின்,மார்க்ஸ் என்று பல தலைவர்களை நாம் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆகவே பாடசாலைகளில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவித்தல் வேண்டும்.பத்திரிகைகளை தினமும் வாசிக்கின்ற பழக்கத்தை பெற்றோரும் ,ஆசிரியர்களும் ஊக்கிவிக்க வேண்டும்.பாடசாலை நூலகத்தை நன்கு திட்டமிட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.மாணவர்கள் நூலகம் சென்று தேடி வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.வாசிப்பு ஒருவருக்கு விலை மதிப்பில்லாத சாதனமாக எப்போதும் இருக்கும்.நூலகங்கள் வாசிப்பு பழக்கத்துக்கு மாணவர்களை இழுத்துச் செல்கின்ற ஒரு களமாகவும் ,வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துகின்ற மையமாகவும் அமைதல் வேண்டும். புதிய தொழில் நுட்ப வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை மாற்றியமைத்துள்ளது.புதிய ஊடக வளர்ச்சி இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இந்த நவீன வளர்ச்சி ஒருவருடைய வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது எனலாம்.இதனால் புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கம் வேகமாக குறைவடைந்து வருகின்றது.இப்போதுள்ள மாணவர் சமூகம் வாசிக்கின்ற ஆற்றல் அல்லது திறன் குறைந்தவர்களாக மாறிவருகின்றார்கள்.இதற்கான காரணமாக தற்போது மாணவர்கள் அதிகமான நேரத்தை இலத்திரனியல் ஊடகங்களில் செலவிடுவது சுட்டிக்காட்டப்படுகிறது. இணைத்தளங்களைப்பார்வையிடுதல்,கைபேசிகளை அதிகளவு பயன்படுத்துதல்.குறுந்தகவல்கள் அனுப்பதல்,சமூக வலைத்தளங்களான முகப்புத்தகங்கள் மற்றும் ருவிட்டர்,புளக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் பாடல்கள் கேட்டல்,சின்மா பார்த்தல் போன்றவற்றுக்கு அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகிறார்கள்.விடியோ பார்த்தல் குறிப்பாக கார்ட்டுன் பார்த்தல்,வீடிNயுh கேம்ஸ் விளையாடுதல் போன்றவற்றை இன்று நாகரிகமான செயலாகவும,; அமைதியாக இருந்து புத்தகம் வாசித்தல்,நூலகத்துக்கு செல்லுதல் போன்றன பழைய நாகரிகம் குறைந்த செயலாக நோக்ப்படுவதையும் இன்று அவதானிக்கலாம். சிறுவர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை மூடிவைக்கும் வரைக்கும் தமது இலட்சியங்களை அடைய முடியாது என்று சொல்லப்படுகின்றது. அமைதியாக இருந்து வாசித்தல் தொலைக்காட்சி பார்த்தலை விட அதிக செயல் திறன் உள்ளதாக அமையுமென்று ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்கள் பாடத்திட்டம் சம்பந்தமான புத்தகங்களையும் கேள்விகளையும் வாசிப்பதை விட புதிய விடயங்களை வாசிப்பதில் ஆர்வமும் மகிழ்வும் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.ஒரு வகையில் பாடத்திட்டம் சம்பந்தமான விடயங்களை மட்டுமே வாசிக்க வற்புறுத்துவதால் அல்லது மட்டுப்படுத்துவதால் வாசிப்பில் மீது மாணவர்களுக்கு வெறுப்பேற்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.ஆகவே வாசிப்பப்பழக்கத்தை அதிகரிப்பதற்கு நாம் முயற்சிகளை கண்டறிய வேண்டியவர்களாக உள்ளோம். இங்கு கவலைக்குரிய விடயமென்னவென்றால் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான எந்த முயற்சியும் எமது பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும்.போட்டி மனப்பாங்கு மிக்கதான கல்வி; சூழலில் பெற்றோர்கள் பரீட்சைக்கான ஆய்ததப்படுத்தலில் தான் அதிகம் கவனம்’ செலுத்துகிறார்களே தவிர சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கான வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுப்பதில்லையென்றே சொல்லலாம். பெற்றோர்களிடம் வாசிப்புப்பழக்கம் இல்லாததால் பிள்ளைகளிடம் அதனை வலியுறுத்த முடியாமல் உள்ளது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.இதேவேளை இளைஞர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகள் போன்றோரிடமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் இருப்பது வாசிப்புப் பக்கத்தை ஊக்குவிப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதையும் இனங்காண முடீயும்.ஆகவே பாடசாலைகள் வருடாந்தம் வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை அதிகரிப்பதோடு பாடசாலை நூலகத்தை மாணவர்களைக் கவரக் கூடியதாக ஒழுங்கு செய்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் பூரண மனிதனை உருவாக்கும் உன்னத பணியை செய்ய முடியும்.
|
MARITIME PORTAL AND GATEWAY OF JOBSEEKARS THIS BLOGS IS DEDICATED TO ALL MARINERS LIKE NAUTICAL SCIENCE, MARINE ENGINEERING, NAVAL ARCHITECTURE, HARBOR AND OCEAN ENGINEERING, PETROLEUM ENGINEERING, MINING ENGINEERING,MARINE BIO-TECH,HND-NAUTICAL&MARINE ENGINEERING, STCW COURSES, EEE-MARINE, MARINE-IT, SHIPPING MANAGEMENT, FINANCE, LOGISTICS, FLEET, ETC.,
Thursday, February 14, 2013
வாசிப்பை நேசிப்போம்-AMETLIBRARY
Subscribe to:
Post Comments (Atom)














No comments:
Post a Comment